Monday, July 14, 2008

மன்மோகன் சிங்கிற்கு ஒரு சலாம்



கடைசியாக அவர் சொன்னதை நிறைவேற்றப்போகிறார். சோனியாகாந்தியால் விசுவாசம் என்ற ஒரு அடிப்படை தகுதியை மட்டும் வைத்து இந்த நாட்டின் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சிலரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை நிறைவேற்றியே காட்டுவேன் என்று அடம்பிடித்து மன்மோகன் சிங் இந்திய வரலாற்றில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
வலிமையற்ற பிரதமர் என்றும் காந்தி குடும்பத்தின் வெறும் கைப்பாவை என்றும் வர்ணிக்கப்பட்ட நம் பிரதமர் தனக்கும் தனித்தன்மை உண்டு என்ற செய்தியை தன் எதிரிகளுக்கு தெளிவாக இந்த விவகாரத்தில் வெளிக்காட்டிவிட்டார். எனவே தான் காங்கிரசுடன் தோழமையை முறித்துக்கொள்ள விரும்பாத கம்யூனிட் கட்சிகள் தாங்கள் மன்மோகன் சிங்கை மன்னிக்கப்போவதில்லை என்று அறிக்கை விடத்தொடங்கியுள்ளன.
அணுஒப்பந்தம் நிறைவேற்றுவதில் மன்மோகன் சிங் அமெரிக்காவுடன் ஏதோ தனி வியாபாரமே செய்து கொண்டது போல சிலர் குற்றம் சாட்டுவதில் ஆச்சரியம் ஒன்றுமே இல்லை . அமெரிக்கா என்றாலே வேப்பங்காய் போலும் உலகில் நடக்கும் எல்லா அக்கிரமங்களுக்கும் அந்த ஓரு நாடு தான் காரணம் என்பது போன்றும் இந்த அறிவுஜீவிகள் பேசுவது கிட்டத்தட்ட ஒரு வகை மனவியாதி தான்.
கூடன்குளம் அணுமின்நிலையம் விசயத்தில் கொடிபிடிக்காத கம்யூனிட் கட்சிகள் இப்போது அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தை மட்டும் எதிர்ப்பற்கு காரணம் என்ன?. அமெரிக்கா என்றாலேயே தீண்டத்தகாத நாடு என்றால் இன்றைக்கு அந்த நாட்டுடன் இந்தியாவை விட அதிக உறவு வைத்துள்ளது கம்யூனிஷ நாடான சீனா தானே. ரஷியா கூட இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கும்போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்தால் மட்டுமே வாக்கு அரசியல் நடத்த முடியும் என்ற கட்டாயத்தில் உள்ள கம்யூனிட்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பது வெறும் உள்ளூர் அரசியல் மட்டும் தானே?

காங்கிரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஓட்டுபோடும்போது அது பாரதிய ஜனதா கட்சியுடன் சேருவதை சகபயணி உறவு என்று அக்கட்சியின் தலைவர்கள் சொன்னாலும் இந்த புதிய கூட்டை கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரே விரும்பவில்லை என்பதையும் அக்கட்சியில் எதிர்ப்பு குரல் ஒலிக்கத்தொடங்கி விட்டது என்பதையும யாரும மறுக்க முடியாதே.
கம்யூனிஸ்ட்களுடன் உறவை முறித்ததில் காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி தொடர்பு கிடைத்துள்ளது. இது கட்டாயம் வரும் பாராளுமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு பலத்தை தான் கூட்டப்போகிறது. கம்யூனிஸ்ட் கட்சி மாயாவதி கட்சி பக்கம் இப்போது சென்றுள்ளது. கூட்டணியை மாற்றுவதில் அவர் நம்ம ஊர் ஜெயலலிதாவை விட மோசம். இந்த சூழ்நிலையில் தங்களின் புதிய அணுகுமுறையால் கம்யூனிஸ்ட்கள் மற்றுமொரு தவறை செய்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
பணவீக்கம் பிரச்சனையில் சிக்கித்தவித்துள்ள மத்திய அரசு இந்த அணுஆயுத ஒப்பந்த விவகாரத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் பிழைப்பாரா என்பது ஜூலை 22ம் தேதி அன்று தான் தெரியும். ஆனால் இதல் வென்றாலும் தோற்றாலும் காங்கிரஸ் முன்பை விட வலியைமாக உலா வரும் என்பது எதிர்க்கட்சிகளுக்கு இப்போதே நன்றாக தெரியும்.

எனவே மன்மோகன் சிறந்த நிதிஅமைச்சர் மற்றுமட்டுமல்ல எதிர்நோக்கு பார்வை கொண்ட பிரதமரும் கூட என்று பெயர் எடுக்க இந்த ஆயுஆயுத கொள்கை ஒரு வரப்பிரசாதமான வாய்ப்பாகி விட்டது.

0 Comments: