Friday, July 18, 2008

பிரதமர் பதவி ஆசையில்...



கனவு காண்பது எல்லோரின் உரிமை. அதுவும் இந்த நாட்டின் பிரதமராக வேண்டும் என்று யாரும் கனவு காணலாம். சொந்தமான வீடு, சொகுசான கார், சண்டைபோடாத மனைவி என்று கனவுகளை காணும் சராசரி மனிதர்களுக்கு இத்துடன் இந்த நாட்டின் பிரதமராகவும் ஆக வேண்டும் என்ற கனவும் இருக்கலாம். அந்த கனவு மற்ற கனவுகளுடன் கல்லறைக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் அரசியல்வாதிகள் பிரதமராக வேண்டும் என்று ஆசைப்படும் போது அது வெளியே பேசப்படுகிறது.
அரசியல்வாதிகளின் கனவுகளைப்பொறுத்தவரையில் இந்த கனவு வட்டம், மாவட்டத்திலிருந்து தொடங்கி விடலாம். பிரதமராகி விட வேண்டும் என்று ஆசைப்படும் முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். தமிழக முதலமைச்சர் கருணாநிதி்க்கு அந்த ஆசை கட்டாயம் இருக்காது. அதற்கு இந்தி பேசச்சொல்லுவார்களோ என்ற காரணம் மட்டுமல்ல. ஆனால் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலிதாவிற்கு நிச்சயம் அந்த ஆசை இருக்க வேண்டும்.
சரி நம்ம ஊர்க்காரர்கள் ஆசையை ஒருபுறம் வைத்து விடுங்கள். மகாராஸ்ட்டிராவின் முன்னாள் முதலமைச்சர் சரத்பவாருக்கு இந்த ஆசை பெரியதாக இருந்தது என்று சொல்லுவார்கள். அதை கிட்டத்தட்ட எட்டிய அவருக்கு கடைசியில் கிடைக்காமல் போனது. இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை என்று அவர் நம்புவது போல் தான் தெரிகிறது. சரத்பவார் பிரதமராக கட்டாயம் ஆதரவு தருவோம் என்று சிவசேனா கூட சொன்னது, ஆனால் ஆதரவு கேட்கும் சந்தர்பம் தான் பவாருக்கு இன்னும் வரவில்லை.
அப்படியே இன்னும் கொஞ்சம் வடக்கே போனால் உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் எல்லோருக்குமே இந்த பிரதமர் கனவு ஆசை உள்ளது. உபியில் வெற்றி அரசியல் நடத்திய தனக்கு புதுடெல்லி நாற்காலி கட்டாயம் கிடைக்கும் என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் நம்பினார், இன்னமும் நம்புகிறார். நீங்கள் வேண்டுமானால் அந்த பதவியை எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஏதோ தங்களிடம் உள்ள மசால்தோசையை கொடுப்பது போல கெடுபட்டினி அரசியல் கட்சிகள் அவருக்கு அவ்வப்போது ஆசை காட்டியபோது முலாயம்சிங்கிற்கு இந்த ஆசை கிட்டத்தட்ட நிறைவேறியது போன்ற நம்பிக்கையே உண்டாக்கியது.
இந்தியாவில் இப்போது இந்த ஆசை அதிகம் பிடித்து அலைபவர் உத்திரபிரதேச முதலமைச்சர் மாயாவதி தான். பிற மாநிலங்களிலும் 2 சதவிகிதம் ஓட்டு பெற்று வருவதால் தன்னை காங்கிரசுக்கு மாற்றாகவே நினைத்து விட்டார். இப்போது அவரின் இந்த கனவுக்கு புதிதாக கிடைத்துள்ள ஆதரவு கம்யூனிட் கட்சிகள். போதாக்குறைக்கு சந்திரபாபு நாயுடுவும் மாயாவதி பிரதமராக தனது ஆதரவை தெரிவித்து தனது பெரிய மனதை இன்னும் பெரிதாக்கி விட்டார்.
அடுத்த பிரதமர் யார் என்று சோனியாவுக்கும், அத்வானிக்கும் கட்டாயம் தெரியாது. ஆனால் அந்த பதவிக்கு தாங்கள் வரமுடியாது என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் அடுத்த பிரதமரை உருவாக்கும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கலாம். அப்படியானால் அடுத்த பிரதமர் யார்?
கனவு காணும் உரிமை எல்லோக்கும் உள்ளது. தான் ஒருநாள் பிரதமராவோம் என்று தேவகெளடா கனவு கூட கண்டிருக்க மாட்டாரே.?

1 Comment:

Anonymous said...

Probably I can say with this blog make, more some interesting topics.