Monday, July 21, 2008

மன்மோகன்சிங் தலை தப்புகிறது



நம்பி்க்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சி எப்படியும் வென்று விடும் என்ற நம்பி்க்கையுடன் தான் பிரதமர் மன்மோகன் சிங் ஜூலை 21ம் தேதி பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார். கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு எம்பி ஓட்டும் இதுவரை இல்லாத மதிப்பு பெற யார் எந்த பக்கம் உள்ளார்கள் என்பது அவர்களுக்கே தெரியாத நிலையில் புதுடெல்லியே கலங்கிய ஒரு குட்டையாகி நிற்க அதில் மீன்பிடிக்க எல்லா அரசியல்வாதிகளும் வலையுடன் நின்றார்கள்.
இந்த நான்கு ஆண்டுகாலத்தில் நம்மைத்தவிர வேறு யாருக்கு தான் பயனாக இருந்தோம் என்ற எண்ணத்தில் இருந்த எம்பிக்களுக்கு கடைசியில் தங்களுக்கும் கடைசி காலத்தில் இப்படி ஒரு மரியாதை கிடைக்கும் என்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. பங்குச்சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டாலும் தங்களின் மதிப்பு கூடித்தான் உள்ளது என்று ஒவ்வொரு எம்பியும் நினைக்கும் அளவிற்கு அவர்களின் கிராக்கி கூடிவிட்டது.
பணவீக்கத்தை காட்டி அடுத்த ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சிக்கு அணுஆயுத ஒப்பந்த விசயத்தில் என்ன நிலை எடுக்க என்று தொடக்கத்திலிருந்தே குழப்பம் தான். இதை எதிர்ப்பது தனது வாக்கு வங்கிகளை பாதிக்கலாம் என்ற பயத்தில் இருந்த அக்கட்சிக்கு மாயாவதி இதில் உட்புகுந்தது அடுத்து என்ன செய்ய என்ற குழப்ப நிலைக்கு தள்ளி விட்டது.
காங்கிரசா அல்லது பாரதிய ஜனதாவா என்ற நிலை மாறி காங்கிரஸா அல்லது மாயாவாதியா என்ற தலைகீழாகி தாங்கள் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்ற நிலைமை தாமரை கட்சிக்கு ஏற்பட்டது எதிர்பாராத ஒன்று தான். மாயாவதி பிரதமர் ஆக ஆதரவு தர மாட்டோம் என்றும் மாயாவதி விஸ்வருவத்தால் காங்கிரஸ் தான் பாதிக்கப்படும் என்று பாரதிய ஜனதா தலைவர்கள் அறிக்கை இடுவது இந்த பயத்தின் அடிப்படையில் தான்.
தேவகெளடாவும் அஜித்சிங்கும் காங்கிரசுக்கு எதிரணியில் சேர்ந்தாலும் மத்திய அரசு வாக்கெடுப்பில் தப்பிப்பதற்கு போதுமான எண்ணிக்கையை பெற்று விட்டது என்பதே பெரும்பான்மையோரின் எண்ணம். பிரதமர் உரை அந்த தன்னம்பிக்கையை வெளிக்காட்டு்றது என்றால் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்திலேயே தங்களுக்கு 276 எம்பி்க்கள் ஆதரவு உள்ளதாக சொன்னபோது எதிர்கட்சிகள் உறுப்பினர்கள் முகத்தில் ஆச்சரியம் ஒன்றும் எழவில்லை. இதில் கடுமையான கொடுமை காங்கிரசுக்கு பாஜக மற்றும் சிவசேனா அதிருப்தியாளர்களின் ஓட்டுக்கள் தான். எப்படியோ மன்மோகன் தலை தப்புகிறது என்பது தான் இன்றயை நிலைமை

1 Comment:

Anonymous said...

மம்தா பானர்ஜியும் ஒதுங்துகிறாரே? மன்மோகன் தப்பி விடுவார் போல் தான் தெரிகிறது