Monday, October 20, 2008

மீண்டும் ராஜ் தாக்கரே…



என்னை கைது செய்து பாருங்களேன் என்று மகாராஸ்ட்டிரா நவ்நிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே விடுத்த மிரட்டலுக்கு ( உண்மையைச்சொன்னால் வேண்டுகோளுக்கு) இணங்க மகாராஸ்ட்ரா அரசாங்கம் தங்களிடம் போலீஸ் துறை என்று ஒன்று உண்டு என்பதை நிருபித்துள்ளது. கடைசியாக எல்லா கட்சிகளும் செய்த ஆர்ப்பாட்டம் தாங்காமல் இனி வழியே இல்லை என்று மாநில அரசாங்கம் ரத்தினகிரியில் வைத்து இன்று அதிகாலை ராஜ் தாக்கரேயை கைது செய்துள்ளது.

அரசியல் கட்சித்தலைவர்களை அதுவும் அடாவடி அரசியல் நடத்துபவர்களை கைது செய்வது கொஞ்சம் கஷ்டம் தான். பால்தாக்கரே போன்றவர்களை கைது செய்தால் அடுத்தவர்களை அந்த கட்சியினர் அடிப்பார்கள். தமிழகத்தில் சில கட்சித்தலைவர்கள் கைது செய்யப்பட்டால் அந்த கட்சியினர் தங்களைத்தானே மண்ணென்ணை கேன் வைத்து அழித்துக்கொள்ளுவார்கள். தற்கொலை கலாச்சாரத்தை உலகிற்கு அறிமுகம் செய்த பாரம்பரியத்தின் இரத்தங்கள் என்பதின் வெளிப்பாடோ என்னவோ?

பொதுவாக இப்படி தலைவர்கள் கைது செய்யப்படும்போது ஏற்படும் கொந்தளிப்பை வைத்துத்தான் அவர்களின் பலம் எப்படி இருக்கிறது என்பதை கணிக்கப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட அன்று சென்னையில் பெரிய அளவில் வன்முறை எதுவும் இருக்கவில்லை. அதை வைத்து திமுகவிற்கு சென்னையில் கூட ஆதரவு இல்லையோ என்று சந்தேகித்து எழுதிய பத்திரிகைளும் இருக்கின்றன. ஆனால் இந்த கைது தான் திமுக மீண்டும் ஆட்சி பிடிக்க உதவிய முதல் படி என்பது ஒருபுறம் இருக்கட்டும். அந்த கைதை சன்டிவி கதற கதற காட்டி கிட்டத்தட்ட ஒருவகையான மனநோயையே சிலருக்கு உண்டாக்கியதையும் இங்கு மறக்க முடியாதது தான்.

இப்போது ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்டுள்ளார். தான் கைது செய்யப்பட்டால் மகாராஸ்டிரா பத்தி எரியும் என்று அவர் மிரட்டினார். ஆனால் இதுவரை எதுவும் பத்தி எரியவில்லை, சிவசேனாவினரின் வயிற்றெரிச்லைத்தவிர.

ராஜ் தாக்கரே சொல்லுவதில் நியாயம் இருக்கிறதா என்று பார்த்தால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு அவர் கையாளும் வன்முறை தான் முகத்தை சுழிக்க வைக்கிறது. இந்தி பேசாத வடஇந்திய மாநிலங்கள் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் தொடர்ந்து விட்டுக்கொடுத்தமையால் வந்த கேடுகள் இது.

மகாராஸ்டிராவில் மராத்தி பேசுகிறார்கள். குஜராத்தில் குஜராத்தி பேசுகிறார்கள். ஆனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் பிராந்திய மொழி திரைப்படங்கள் மருந்துக்கு தான் உள்ளது. திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளில் மராத்தி மற்றும் குஜராத்தி கலாச்சாரங்ளை இந்தி அழித்துள்ளது. இன்றைக்கு மும்பையை எடுத்துக்கொண்டால் இங்கு வாழ இந்தி கட்டாயம் தேவை. ஆனால் மராத்தி தேவையில்லை. இப்படி சென்னையில் ஒருநிலை வந்தால் நமக்கு எப்படி இருக்கும்?


ராஜ்தாக்கரேயின் இந்த அரசியலால் பிராந்திய கலாச்சாரங்கள் வலுப்பெறுபவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது மகிழ்சிக்குரிய ஒரு விசயம் . ஆனால் ராஜ்தாக்கரே மராத்திய கலச்சாரம் பற்றி கவலைப்படும்போது அதில் ஆதிகால மனிதனின் வன்முறையை ஆயுதமாக்குவது தான் கவலை தருகிறது.

ரயில்வேக்கள் இந்தியை பரப்பும் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ரயில்வேக்களில் வட இந்தியர்கள் தான் அதிக அளவில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். பல வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இந்தியில் மட்டும் வெளியிடப்படுகின்றன. சமீபகாலமாக பீகாரைச்சேர்ந்தவர்கள் பெருமளவில் வேலைக்கு சேர்க்கப்படுகின்றனர். இதற்கு பல புள்ளியியல் ஆதாரங்கள் உள்ளன. இவைகள் கண்டிக்கப்பட வேண்டியவையே.

தேசிய ஒருமைப்பாட்டின் பெயரில் பிராந்திய நலன்களை காவு கொடுக்கக்கூடாது. சென்னைக்கு வரும் ஒரு வெளிமாநிலத்தவர் விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசுகிறார். மும்பைக்கு வரும் ஒரு வெளிமாநிலத்துக்காரர் மராத்திக்கு பதிலாக இந்தி கற்றுக்கொள்ளுகிறார். இது மராத்திய கலாச்சாரத்தை அழித்து விடும் படிக்கல்.

குஜராத்தியர்கள் தங்கள் மொழியை காவு கொடுத்து இந்தியை ஏற்றுக்கொண்டதால் அவர்களுக்கு வியாபார பலன்கள் கிடைத்தது , ஆனால் மராத்தியர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.

எனவே ராஜ் தாக்கரேயின் உணர்வுகளை வரவேற்கிறோம். ஆனால் அதற்கு கையாளும் வழிமுறைகளை கண்டிக்கிறோம். இதற்கு பதிலாக ராஜ் தாக்கரேயின் அலுவலகங்களில் அடுத்தவர்களுக்கு இலவசமாக மராத்தி சொல்லிக்கொடுத்தால் அது அவரின் கொள்கைகளுக்கு இன்னும் வலு கொடுக்கும்.

0 Comments: