
கனவு காண்பது எல்லோரின் உரிமை. அதுவும் இந்த நாட்டின் பிரதமராக வேண்டும் என்று யாரும் கனவு காணலாம். சொந்தமான வீடு, சொகுசான கார், சண்டைபோடாத மனைவி என்று கனவுகளை காணும் சராசரி மனிதர்களுக்கு இத்துடன் இந்த நாட்டின் பிரதமராகவும் ஆக வேண்டும் என்ற கனவும் இருக்கலாம். அந்த கனவு மற்ற கனவுகளுடன் கல்லறைக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் அரசியல்வாதிகள் பிரதமராக வேண்டும் என்று ஆசைப்படும் போது அது வெளியே பேசப்படுகிறது.
அரசியல்வாதிகளின் கனவுகளைப்பொறுத்தவரையில் இந்த கனவு வட்டம், மாவட்டத்திலிருந்து தொடங்கி விடலாம். பிரதமராகி விட வேண்டும் என்று ஆசைப்படும் முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். தமிழக முதலமைச்சர் கருணாநிதி்க்கு அந்த ஆசை கட்டாயம் இருக்காது. அதற்கு இந்தி பேசச்சொல்லுவார்களோ என்ற காரணம் மட்டுமல்ல. ஆனால் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலிதாவிற்கு நிச்சயம் அந்த ஆசை இருக்க வேண்டும்.
சரி நம்ம ஊர்க்காரர்கள் ஆசையை ஒருபுறம் வைத்து விடுங்கள். மகாராஸ்ட்டிராவின் முன்னாள் முதலமைச்சர் சரத்பவாருக்கு இந்த ஆசை பெரியதாக இருந்தது என்று சொல்லுவார்கள். அதை கிட்டத்தட்ட எட்டிய அவருக்கு கடைசியில் கிடைக்காமல் போனது. இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை என்று அவர் நம்புவது போல் தான் தெரிகிறது. சரத்பவார் பிரதமராக கட்டாயம் ஆதரவு தருவோம் என்று சிவசேனா கூட சொன்னது, ஆனால் ஆதரவு கேட்கும் சந்தர்பம் தான் பவாருக்கு இன்னும் வரவில்லை.
அப்படியே இன்னும் கொஞ்சம் வடக்கே போனால் உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் எல்லோருக்குமே இந்த பிரதமர் கனவு ஆசை உள்ளது. உபியில் வெற்றி அரசியல் நடத்திய தனக்கு புதுடெல்லி நாற்காலி கட்டாயம் கிடைக்கும் என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் நம்பினார், இன்னமும் நம்புகிறார். நீங்கள் வேண்டுமானால் அந்த பதவியை எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஏதோ தங்களிடம் உள்ள மசால்தோசையை கொடுப்பது போல கெடுபட்டினி அரசியல் கட்சிகள் அவருக்கு அவ்வப்போது ஆசை காட்டியபோது முலாயம்சிங்கிற்கு இந்த ஆசை கிட்டத்தட்ட நிறைவேறியது போன்ற நம்பிக்கையே உண்டாக்கியது.
இந்தியாவில் இப்போது இந்த ஆசை அதிகம் பிடித்து அலைபவர் உத்திரபிரதேச முதலமைச்சர் மாயாவதி தான். பிற மாநிலங்களிலும் 2 சதவிகிதம் ஓட்டு பெற்று வருவதால் தன்னை காங்கிரசுக்கு மாற்றாகவே நினைத்து விட்டார். இப்போது அவரின் இந்த கனவுக்கு புதிதாக கிடைத்துள்ள ஆதரவு கம்யூனிட் கட்சிகள். போதாக்குறைக்கு சந்திரபாபு நாயுடுவும் மாயாவதி பிரதமராக தனது ஆதரவை தெரிவித்து தனது பெரிய மனதை இன்னும் பெரிதாக்கி விட்டார்.
அடுத்த பிரதமர் யார் என்று சோனியாவுக்கும், அத்வானிக்கும் கட்டாயம் தெரியாது. ஆனால் அந்த பதவிக்கு தாங்கள் வரமுடியாது என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் அடுத்த பிரதமரை உருவாக்கும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கலாம். அப்படியானால் அடுத்த பிரதமர் யார்?
கனவு காணும் உரிமை எல்லோக்கும் உள்ளது. தான் ஒருநாள் பிரதமராவோம் என்று தேவகெளடா கனவு கூட கண்டிருக்க மாட்டாரே.?
Friday, July 18, 2008
| [+/-] |
பிரதமர் பதவி ஆசையில்... |
Thursday, July 17, 2008
| [+/-] |
மீனவர்களுக்காக திமுகவும் பாமகவும் வரிந்து கட்டுமா? |

தமிழ்நாட்டு மீனவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் தானா என்று சந்கேதப்படும் அளவிற்கு அவர்களின் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் இந்த அரசாங்கம் கைகட்டி வாய்பொத்தி நின்று கொண்டிருப்பது ஒரு அரசாங்கம் தன் ஆதிகுடிகள் மீது இவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்ள முடியுமா என்ற வேதனையை உண்டாக்கி உள்ளது.
கிட்டத்தட்ட போர்ப்பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களின் சூழ்நிலையை போன்று தான் இன்றைக்கு தென்மாவட்டங்களின் மீனவர்கள் வாழந்து கொண்டிருக்கிறார்கள். தங்களின் பாரம்பரிய தொழிலை தங்களின் புண்ணிய பூமியில் செய்வது இந்த மக்களுக்கு இன்றைக்கு இயலாத காரியமாக மாறிவிட்டது. காலையில் கடலுக்கு செல்லும் தன் கணவன் மாலையில் சிங்கள் பேய்நாய்களின் தாக்குதல்களிலிருந்து தப்பித்து வருவானா என்று ஒவ்வொரு மீனவ பெண்ணும் கவலைப்படும் அளவிற்கு நிலைமை பாதாளத்தில் போய் நிற்கிறது.
பக்கத்தில் இருக்கும் இலங்கை தனி நாடாக இருக்கலாம். ஆனால் மறுகரையான மன்னாரில் உள்ள மீனவர்கள் அனைவரும் இக்கரை மக்களின் சொந்தக்காரர்கள். ஆனால் ஈழப்போர் இன்றைக்கு இந்த இரண்டு கடற்கரையோர மக்களையுமே தங்கள் தொழிலை செய்ய முடியாமல் ஆக்கி விட்டது.
விடுதலைப்புலிகளை அடக்குகிறோம் என்ற போர்வையில் சிங்கள ராணுவம் நம் மீனவர்களை தொழில் செய்ய முடியாது என்ற பயங்கரத்திற்கு கொண்டு போய் விட்டுள்ளது. வெளிநாட்டு கொள்கை என்ற பெயரில் மத்திய அரசாங்கள் பக்கத்து நாட்டு அரசாங்கத்தின் அத்துமீறல்களை கண்டுகொள்ளாமல் நிற்கிறது என்றால் இதற்கு ஒரு சாத்வீக தீ்ர்வு காண மாநில அரசாங்கம் விரும்பாமல் உள்ளது ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் தருகிறது.
ஒரு மீனவனின் உயிர் இந்த அளவிற்கு மலிவாக போய்டவிட்டதா?. இலங்கை ராணுவத்தின் துப்பாக்கிக்குண்டுக்கு பலியான ஏழை மீனவனுக்கு நஷ்டஈடு கொடுக்க வரும் அரசியல்வாதி்க்கு நன்றி போஸ்டர்களை இராமேஸ்வரம் சுவர்களில் பார்க்கும் போது இந்த மக்களை ஏமாற்றுவது இந்த அளவிற்கு எளிதா என்று தோன்றுகிறது.
நிலைமை மோசமாதை கண்டு தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் ஒரே நேரத்தில் போராட்டத்தை அறிவித்துள்ளது இந்த சோகத்தில் இவர்கள் செய்ய நினைக்கும் காமடியைத்தான் காட்டுகிறது. மத்தியில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தர தன் தந்தையின் பெயரை லக்னோ விமானநிலையத்திற்கு வைக்க வேண்டும் என்ற அஜித்சிங்கின் கோரிக்கையை மத்திய அரசு ஒரே இரவில் நிறைவேற்றி உள்ளது. திமுகவிற்கு மீனவர் நலனில் அக்கறை என்றால் இலங்கை ராணுவத்திற்கு தரும் ஆதரவை இந்தியா விலக்கிக்கொள்ளா விட்டால் ஆதரவு வாபஸ் என்று அறிவிக்கட்டுமே. திமுக இதைக்கட்டாயம் செய்யாது என்று தெரியும், ஆனால் பட்டாளி மக்கள் கட்சி இதைச்செய்யலாமே?
Monday, July 14, 2008
| [+/-] |
மன்மோகன் சிங்கிற்கு ஒரு சலாம் |

கடைசியாக அவர் சொன்னதை நிறைவேற்றப்போகிறார். சோனியாகாந்தியால் விசுவாசம் என்ற ஒரு அடிப்படை தகுதியை மட்டும் வைத்து இந்த நாட்டின் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சிலரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை நிறைவேற்றியே காட்டுவேன் என்று அடம்பிடித்து மன்மோகன் சிங் இந்திய வரலாற்றில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
வலிமையற்ற பிரதமர் என்றும் காந்தி குடும்பத்தின் வெறும் கைப்பாவை என்றும் வர்ணிக்கப்பட்ட நம் பிரதமர் தனக்கும் தனித்தன்மை உண்டு என்ற செய்தியை தன் எதிரிகளுக்கு தெளிவாக இந்த விவகாரத்தில் வெளிக்காட்டிவிட்டார். எனவே தான் காங்கிரசுடன் தோழமையை முறித்துக்கொள்ள விரும்பாத கம்யூனிட் கட்சிகள் தாங்கள் மன்மோகன் சிங்கை மன்னிக்கப்போவதில்லை என்று அறிக்கை விடத்தொடங்கியுள்ளன.
அணுஒப்பந்தம் நிறைவேற்றுவதில் மன்மோகன் சிங் அமெரிக்காவுடன் ஏதோ தனி வியாபாரமே செய்து கொண்டது போல சிலர் குற்றம் சாட்டுவதில் ஆச்சரியம் ஒன்றுமே இல்லை . அமெரிக்கா என்றாலே வேப்பங்காய் போலும் உலகில் நடக்கும் எல்லா அக்கிரமங்களுக்கும் அந்த ஓரு நாடு தான் காரணம் என்பது போன்றும் இந்த அறிவுஜீவிகள் பேசுவது கிட்டத்தட்ட ஒரு வகை மனவியாதி தான்.
கூடன்குளம் அணுமின்நிலையம் விசயத்தில் கொடிபிடிக்காத கம்யூனிட் கட்சிகள் இப்போது அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தை மட்டும் எதிர்ப்பற்கு காரணம் என்ன?. அமெரிக்கா என்றாலேயே தீண்டத்தகாத நாடு என்றால் இன்றைக்கு அந்த நாட்டுடன் இந்தியாவை விட அதிக உறவு வைத்துள்ளது கம்யூனிஷ நாடான சீனா தானே. ரஷியா கூட இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கும்போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்தால் மட்டுமே வாக்கு அரசியல் நடத்த முடியும் என்ற கட்டாயத்தில் உள்ள கம்யூனிட்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பது வெறும் உள்ளூர் அரசியல் மட்டும் தானே?
காங்கிரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஓட்டுபோடும்போது அது பாரதிய ஜனதா கட்சியுடன் சேருவதை சகபயணி உறவு என்று அக்கட்சியின் தலைவர்கள் சொன்னாலும் இந்த புதிய கூட்டை கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரே விரும்பவில்லை என்பதையும் அக்கட்சியில் எதிர்ப்பு குரல் ஒலிக்கத்தொடங்கி விட்டது என்பதையும யாரும மறுக்க முடியாதே.
கம்யூனிஸ்ட்களுடன் உறவை முறித்ததில் காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி தொடர்பு கிடைத்துள்ளது. இது கட்டாயம் வரும் பாராளுமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு பலத்தை தான் கூட்டப்போகிறது. கம்யூனிஸ்ட் கட்சி மாயாவதி கட்சி பக்கம் இப்போது சென்றுள்ளது. கூட்டணியை மாற்றுவதில் அவர் நம்ம ஊர் ஜெயலலிதாவை விட மோசம். இந்த சூழ்நிலையில் தங்களின் புதிய அணுகுமுறையால் கம்யூனிஸ்ட்கள் மற்றுமொரு தவறை செய்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
பணவீக்கம் பிரச்சனையில் சிக்கித்தவித்துள்ள மத்திய அரசு இந்த அணுஆயுத ஒப்பந்த விவகாரத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் பிழைப்பாரா என்பது ஜூலை 22ம் தேதி அன்று தான் தெரியும். ஆனால் இதல் வென்றாலும் தோற்றாலும் காங்கிரஸ் முன்பை விட வலியைமாக உலா வரும் என்பது எதிர்க்கட்சிகளுக்கு இப்போதே நன்றாக தெரியும்.
எனவே மன்மோகன் சிறந்த நிதிஅமைச்சர் மற்றுமட்டுமல்ல எதிர்நோக்கு பார்வை கொண்ட பிரதமரும் கூட என்று பெயர் எடுக்க இந்த ஆயுஆயுத கொள்கை ஒரு வரப்பிரசாதமான வாய்ப்பாகி விட்டது.
Friday, July 11, 2008
| [+/-] |
குடிமகன் |

குடிமகன்
ஞாயிற்றுக்கிழமையானால் கோவிலில் இரண்டாவது பூசை முடிந்ததும் குடிமகன் பீரிஸ் எங்கள் வீட்டிற்கு தவறாமல் வந்துவிடுவார். என் அப்பா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எப்படி முடிவெட்டிக்கொள்ளுகிறார் என்று எனக்கு பெரிய சந்தேகம் உண்டு. இப்படி வாரம் ஒருமுறை முடிவெட்டிக்கொள்ளுவதால் அவர் போலீஸ் ஆபிஸர் மாதிரி இருந்தாலும் குடிமகன் பீரிஸ் இப்படி வாராவாரம் வீடு வந்து போவதில் வேறு ஒரு காரணமும் இருந்தது.
அது முடிவெட்டிக்கொண்டிருக்கும் போது காதில் ஊர்க்கதைகளை ஊதுவது தான். ஐயா உங்களுக்குத் தெரியுமாய்யா, போன வராம் ஊர்கூட்டத்தில் இன்னார் மகன் இன்னாரை சிலுவை பிடிக்கச்சொல்லி தண்டைன கொடுத்தாங்க ( எங்கள் ஊர்களில் பெரிய குற்றம் செய்பவர்களை சிலுவை கையில் பிடித்துக்கொண்டு ஊர் சுற்றி வரச்செய்வது ஒரு வழக்கம்) என்று தொடங்கி சாமியாருக்கு எதிராக நடுத்தெருவில் நடக்கும் சதி வரை ஊர் நடப்புகளை விலாவாரியாக சொல்லுவார்.
பீரிஸ்பிள்ளை இப்படி போட்டுக்கொடுப்பதில் எனக்கும் வினை வருவது உண்டு. நம்ம பையனை இன்னார் மகன் இன்னாருடன் விளையாடும் இடத்தில் வைத்து பார்த்தேனே. அந்த பையன் சரியில்லை. நம்ம பிள்ளை அவன்கூட எல்லாம் பழகக்கூடாது என்று சொல்லி அவ்வப்போது வேட்டும் வைப்பார்.
முதலில் எனக்கு பீரிஸ்பிள்ளையை அறவே பிடிக்காது. அப்பாவிற்கு வாரம் ஒருமுறை முடிவெட்டுபவர் எனக்கு மாதம் ஒருமுறையேனும் தலையை பதம் பார்த்து விட வேண்டுமென்பதில் அவர் கவனமாக இருப்பது தான் எனக்கு அவரை பிடிக்காததற்கு முதல் காரணம். கமல் மாதிரி கப் முடி வைக்க ஆசைப்பட்ட எனக்கு குடிமகன் பீரிஸ் ஒரு பெரிய வில்லன் தான்.
என்கூட படிக்கும் பையன்கள் எல்லாம் பக்கத்து டவுனில் போய் முடிவெட்டிக்கொண்டிருந்த போது நான் மட்டும் பீரிஸ்பிள்ளையிடம் முடிவெட்டுவது எனக்கு கடுப்பாகவே இருக்கும். ஆனால் பீரிஸ்பிள்ளை இருக்கும் வரை அவர் தான் எனக்கு முடிவெட்ட வேண்டும் என்பதில் என் அப்பா மிகவும் கண்டிப்பாக இருந்தார்.
எங்கள் வீடு மாதா கோவிலுக்கு பக்கத்தில் இருந்தது. யாரும் இறந்துபோனால் இறுதி சடங்கு அடக்க பூசைக்கு பாதிரியாருக்கு உதவி செய்ய ஆல்டர் பாய்ஸ்( கோவில் பீடத்தில் பாதிரியாருக்கு உதவியாக நிற்கும் சிறுவர்கள்) பணிக்கு எந்த பையனும் வரமாட்டான். சாவுக்கு அவ்வளவு பயம். அடக்க பூசை நடக்கும் பொழுதெல்லாம் கோவில் கணக்கப்பிள்ளை( கோவிலில் பாதிரியாருக்கு உதவும் வேலையில் இருப்பவர்) வீடு தேடி வந்து என்னை சாமியாருக்கு உதவ அழைத்துச் செல்வார்.
எனக்கு கோவில் கணக்கப்பிள்ளை மீது கடும் பிரியம். நான் நான்காம் வகுப்பு படிக்கும்போதே என்னை கோவிலில் பைபிள் வாசிக்க ஏற்பாடு செய்தவர் அவர். பைபிள் ஸ்டாண்டை விட உயரம் குறைவாக இருப்பேன் என்பதால் கீழே ஒரு எக்ஸ்ட்ரா பலகை அடித்து என்னை பைபிள் வாசிக்க வைத்தவர் அவர் . பசங்களுக்கு அவரைக்கண்டால் ஒரு பயம். கோவிலில் ஜெபம் நடக்கும்போது பேசிக்கொண்டிருக்கும் வெடிப்பசங்களை அவர் பின்னால் பூனை மாதிரி முதுகில் அடிக்கும்போது கோவிலே திரும்பி பார்க்கும். சிலவேளைகளில் பிரசங்கம் வைத்துக்கொண்டிருக்கும் பாதிரியாரே அடிச்சத்தத்தை கேட்டு பிரசங்கத்தை நிறுத்தி விடுவார்.
ஒருமுறை கீழத்தெருவில் ஒருவர் இறந்துவிடவே வழக்கம்போல அடக்க பூசைக்கு பாதிரியாருக்கு உதவி செய்ய பசங்க யாரும் கிடைக்கவில்லை. அதுவும் இளம்வயது பெண் மரணமடைந்திருந்தார். கோவில் கணக்கப்பிள்ளை இறுதி சடங்கு பூஜைக்கு உதவி செய்ய என்னை தேடி வருவார் என்று எனக்குத்தெரியும். எனவே நான் வீட்டில் சமையறையில் ஒளிந்து கொண்டிருந்தேன். அன்று என் துரதிர்ஷ்டம் அவர் பின்கொல்லை கதவை வந்து தட்டியது தான். நானும் வசமாக மாட்டிக்கொண்டேன்.
கோவில் பூஜைக்கு முன்னர் கீழத்தெருவில் உள்ள இறந்தவர் வீட்டிற்கு பிரேதத்தை எடுக்க பாதிரியாருடன் பூசை உதவி உடுப்புப்போட்டுக்கொண்டு சென்றேன். வீட்டின் முன்னர் ஒரு தட்டிப்பந்தலில் சடலத்தை வைத்திருந்தார்கள். நான் கையில் சிலுவையுடன் அடக்கப்பெட்டி முன்னர் நின்று கொண்டிருந்தேன். பாதிரியார் செபம் சொல்லி மந்திரித்து விட்டு கிளம்பினார்.
உரிமைப்பட்ட சொந்தக்காரர்கள் எல்லாம் சவப்பெட்டியை ஆளுக்கு ஒரு மூலையிலிருந்து தூக்க அழுதுகொண்டிருந்த பெண்கள் எல்லாம் இப்போது உரக்க சப்தமிட்டு பெட்டியை தூக்க விடாமல் தடுக்க ஏற்கெனவே வலுக்கட்டாயமாக பாதிரியாருக்கு உதவிக்கு கொண்டுவரப்பட்ட நான் அடக்க பெட்டி முன்னர் மாட்டிக்கொண்டேன். பெண்களின் ஒப்பாரியில் நானும் சத்தம் போட்டு அழுதுவிட அப்போது அங்கு நின்று கொண்டிருந்த குடிமகன் பீரிஸ் என்னை அந்த அழும் கூட்டத்திலிருந்து காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார்.
அன்று முதல் எனக்கு பீரிஸ்பிள்ளை மீது சிறிது பாசம் ஆரம்பித்தது. அதன் பின்னர் அவரை எங்கு கண்டாலும் நலம் விசாரிப்பேன். நான் பம்பாய் செல்லுவதாக அவரிடம் சொன்னபோது அங்கு ஒரு நல்ல கத்தரிகோல் வாங்கி கொடுத்து விடு என்றார். ஆனால் நான் அதை அவருக்கு வாங்கிக்கொடுப்பதற்கு முன்னர் அவர் திடீரென இறந்து விட்டதாக செய்தி கிடைத்தது.
குமடிமகன் பீரிஸ் நன்றாக குடிப்பார். ஆனால் காரியத்தில் சரியாக இருப்பார். பலர் பீரிஸ் பிள்ளையிடம் ஓசிக்குத்தான் முடி வெட்டுவார்கள். வருடத்திற்கு அவருக்கு ஏதேனும் கொடுப்பதை பெரிதாக காட்டுவார்கள். கடற்கரையில் அவர் முடிவெட்டும் குடும்பத்தினர்களின் கட்டுமரம் வரும் போது ஒரு பிடி மீன் எடுப்பார். அந்த மீனையும் ஏச்சிக்கும் பேச்சி்ற்கும் இடையில் தான் அவர் எடுக்க வேண்டும். தோட்டம் வைத்திருப்பவர்கள் அறுவடை வரும்போது ஏதேனும் கொடுப்பார்கள். அந்த வீடுகளிலிருந்து குடிமகன் மனைவி வாழைக்குலைகளையும், தேங்காய்களையும் உரிமையுடன் எடுத்துச் செல்லுவார்.
பீரீஸ்பிள்ளை தனது கடைசிகாலத்தில் தன் பிள்ளைகள் பற்றி அதிகம் கவலைப்பட்டார். தனது வேலையை தன் பிள்ளைகள் யாரும் செய்ய வருவதில்லை என்பது அவர் வருத்தம்.
பீரிஸ்பிள்ளை மகன்கள் எல்லோரும் கடலுக்கு மீன்பிடிக்கும் தொழிலை செய்து கொண்டிருந்தனர். அவர் இறந்த பிறகு அவர்களில் ஒரு பிள்ளையை வலுக்கட்டாயமாக குடிமகன் தொழிலுக்கு கொண்டு வந்ததாக கேள்விப்பட்டேன். எனினும் அந்த பையன் தன் பரம்பரை தொழிலை ஒழுங்காகச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு. மற்ற பிள்ளைகள் யாரும் அந்த தொழிலுக்கு வரவில்லை.
யாரும் இறந்து விட்டால் ஊர் ஊராக போய் துக்சச்செய்தியை உறவினர்களுக்கு சொல்லுவது, ஊர் கமிட்டி எடுக்கும் முடிவை பொதுமக்களுக்கு கொட்டு அடித்துச்சொல்லுவது எல்லாம் இந்த குடிமக்களின் வேலை தான். கொட்டு அடித்துக்கொண்டு வருபவர் நாளைக்கு ஊர்க்கூட்டம் என்பதை நாளைகழித்து கூட்டம் என்று சொல்லி முடிப்பார். ஊருக்குள் கொட்டு அடித்துக்கொண்டு குடிமகன் வரும்போது பெரிசு முதல் சிறியவர்கள் வரை என்ன செய்தி என்ன செய்தி என்று கேட்டு அவர் சொல்ல வந்த செய்தியை இவர்களே மாற்றி விடுவார்கள்.
இப்போது எங்கள் ஊர் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் இந்த குடிமகன்களை தான் ஊர்க்காரர்கள் மாறவிடுவதே இல்லை. இதற்கு பயந்து பலர் தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு சென்று விட்டனர். மற்றும் பலர் பக்கத்து ஊர்களுக்குப் போய் மீன்பிடி தொழிலை செய்கிறார்கள். அடுத்த ஊரிலாவது இவர்கள் நாவிதன் பட்டம் இல்லாமல் வாழுகிறார்களா என்றால் அதுவும் இல்லை.
ஊரில் அடிமைகள் போய் வேலை செய்யும் இவர்களுக்கு குடிமகன்கள் என்று எங்கள் ஊரில் எப்படி அழைக்கிறார்கள் என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு. காட்டுமிராண்டித்தனமாக அடித்தேன், பிடித்தேன் என்று செயல்படும் எங்கள் ஊர்களில் இவர்களால் எப்படி இவ்வளவு பயபக்தியாக செயல்பட முடிகிறது என்பது அதை விட எப்போதும் ஆச்சரியம் தரும் விசயம்.
புனித சவேரியார் காலத்தில் ( சுமார் 450 வருடங்களுக்கு முன்னர் )தங்களுக்கு ரொம்ப மரியாதை இருந்தது என்று பீரிஸ்பிள்ளை என் அப்பாவிடம் பெருமை பொங்க சொல்லுவதை கேட்டிருக்கிறேன். இப்போது குடிமக்களை யாரும் முடிவெட்ட தேடுவதில்லை. இழவு வீட்டில் மட்டும் இப்போது இவர்களுக்கு சிறிது கிராக்கி. அதுவும் அங்கு விரைவில் அண்டர்டேக்கர்கள் வந்து விடலாம்.
ஒரு சமூகத்தில் எல்லோரும் முன்னேற வேண்டும். ஆனால் அது நடக்கும் போது ஒரு நெரூடல் ஏற்படுவதும் இயற்க்கை தான். தமிழில் நாவிதன் என்றால் பக்கத்தில் இருப்பவன் என்று பொருள். மலையாளத்தில் கூட இவர்களை அடுத்தோன் என்று அழைக்கிறார்கள். எங்கள் ஊர்களில் இன்னும் ஒரு படி மேலே போய் குடிமகன் என்று அழைப்பதும் ஒரு கலாச்சாரத்தின் எச்சமோ என்னவோ
Tuesday, June 17, 2008
| [+/-] |
கசாப்புக்கடை |
உள்ளே வெளியே…
தமிழக மக்கள் இந்த கோமாளி அரசியல்வாதிகளிடளிருந்து எப்படி தப்பிக்க போகிறார்கள் என்ன கவலையை இந்த பட்டாளி மக்கள் விவகாரம் மீண்டும் பெரிதாக்கி உள்ளது. உள்ளே வெளியே என்று இவர்கள் நடத்தும் நாடகத்திற்கு இந்த மக்கள் எத்தனை நாட்கள் ஏமாறப்போகிறார்கள்.
அரசியல் கட்சிகளின் நலன்கள் என்பது மக்களின் நலனா?. தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காக அரசியல் நடத்தும் இந்த கட்சிகள் மக்களுக்காகவே வாழ்பவர்கள் போல எப்படி பாசாங்கு செய்கிறார்கள் பாருங்கள்.
இப்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் அல்லது வெளியேறியதால் அடுத்து இளிச்சவாய் தமிழர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது. ஒருவர் தலையை வெட்டுவேன் என்று சொன்னாராம்… அவர் தலையை வெட்டுவேன் என்றால் என்ன, என் தலையை வெட்டுவேன் என்று சொன்னால் என்ன, எல்லாம் ஒன்று தானே என்று ஒருவர் ஆதங்கப்படுகிறார். தலையை வெட்டுவேன் என்று ஆறு மாதம் முன்னர் தானே சொன்னார், இப்போது சொல்லவில்லையே என்று ஒருவர் சப்பை கொட்டல்.
இந்த கசாப்புக்கடை வியாபாரத்தில் அப்பாவி தமிழ் ஆடுகள் எப்படி தப்பப்போகின்றன.? இந்த சாக்கடைகள் வேண்டாம், புதிதாக தண்ணீர் பாய்ச்சுங்கள் என்றால் அடுத்து காத்திருக்கும் புதிய அரசியல் கட்சிகள் யார் என்று பாருங்கள். வெட்கமய்யா வெட்கம். இந்த குட்டித்தலைவர்களை நினைத்தால் இன்னும் மனம் கலங்குகிறது
தமிழக அரசியல் தரம் தாழ்ந்தது தான். ஆனால் அதன் எதிர்காலம் இன்னும் தாழ்ந்து விடும் என்பதை யாரும் தடுக்க முடியாது போல?
Friday, March 28, 2008
| [+/-] |
மாட்டுவால் |

எங்க ஊர்ல சூசையாரை தெரியாதவங்களே இருக்க முடியாது.மாட்டு
வால்னுபட்டப்பெயரும் அவருக்குஉண்டு. மாட்டு வால் பேரு எதுக்கு வந்திச்சுனு
யாருக்கும் தெரியது. ஆனா சூசையாரை விட மாட்டு வால்னு சொன்னா
சின்னப்பையனுக்கு கூட டக்குனு அடையாளம் தெரிஞ்சிடும்
சூசையார் அப்பா ஞானப்பிள்ளை அந்த காலத்தில கொழும்பில
இருந்தவரு. அங்க கருவாடு வியாபாரம் செய்த எங்க ஊர்க்காரங்கள்ல அவர் ஒரு
பெரும் புள்ளி. சுதந்திரத்தற்கு முன்னாலே அவர் கல்யாணத்துக்கு தான் எங்க ஊர்ல
முதல்முதலா புதுமாப்பிள்ளையும் பொண்ணையும் கொலுக்கார்ல வைச்சு பட்டணப்பிரவேசம் வந்ததா பெரிசுங்க கடற்கரையில பேசுறத கேட்டிருக்கேள்.
கடைசி காலத்தில அவருக்கு கொழும்பு காத்து பிடிக்கல. இரண்டாவது
பெண்டாட்டியை அங்கேயே விட்டுட்டு ( அந்த அம்மா சிங்களத்துக்காரி) முதல்
மனைவி மற்றும் ஒரு மகனோட ஞானப்பிள்ளை சொந்த ஊருக்கு வந்திட்டாரு.
வந்த புதுசுல மாட்டு வண்டில தான் எங்கேயும் போவாராம்.கையில
இருந்த காசையெல்லாம் கொழும்புனு நெனச்சிக்கிட்டு தண்ணி மாதிரி
செலவழிச்சிருக்காரு. குந்தி இருந்து சாப்பிட்டா கடலும் கரையும் மாதிரி
ஞானப்பிள்ளை சொத்து எல்லாம் கரைஞ்சி போச்சு. கடைசில மனுஷன்கிட்ட ஒரு
பைசாவும் மிஞ்சல்ல.
சொகமில்லாம விழுந்தப்ப ஆஸ்பத்திரிக்கு கூட பணம் இல்லாமல்
கடைசியில நாகர்கோவில் கவர்மெண்ட் ஆஸ்பத்திரில வைச்சு பாடு பாத்தாங்க.
பத்து நாள்ல முடியாம பொணமா ஊருக்கு கொண்டு வந்தாங்க. அடக்க செலவுக்கு
பைசா இல்லாம மகன் சூசையார் தான் அங்க இங்கணு கடன் வாங்கி அடக்கம்
பண்ணினார்..
கடைசில சாவறதுக்கு முன்ன ஞானபிள்ளை தன் மொவன்கிட்ட நான் செத்தா பிஷப்பை வைச்சு தான் அடக்கம் எடுக்கம்ணு சொன்னாராம்.
அப்பா கடைசி ஆசையை நிறைவேத்த சூசையார் கூடபத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.
ஞானப்பிள்ளை ஊரில் பெரிய மனுஷன் தான். என்றாலும் அவர் பையன் சூசையார் நாலெழுத்து ஒழுங்கா படிக்கல. முதல்ல அப்பா செல்வாக்குல்ல மஞ்சள் சட்டைபோட்டுக்கிட்டு அலைஞ்சாரு. அப்பா செல்வாக்கு சரிய சரிய சூசையாரும் சரிய ஆரம்பித்தார்.
அப்பா போனபிறகு தான் மகனுக்கு பிழைக்கிறதுக்கு வேலைக்கு போகணும்னு தோணிச்சு. ஞானப்பிள்ளை தன் செல்வாக்கை பயன்படுத்தி பையனுக்கு பக்கத்து ஊரில் பணக்கார குடும்பத்தில் பொண் எடுத்தார். அந்தம்மாவும் வெள்ளையும் சுள்ளையுமா மகாராணி மாதிரி இருப்பாங்க.
தான் வசதியான குடும்பத்திலிருந்து வந்தாலும் கணவன் கஷ்டப்பட்டதை நினைத்து எப்பவும் அவங்க அலுத்துக்கொள்ளவே இல்லை. கடைசில நிலைமை படுமோசமகி சூசையாரு கடலுக்கு போக ஆரம்பித்தார்.
உடல் கஷ்டப்பட்டு பழக்கமே இல்லை என்பதால் கடல் தொழிலிலும் அவரால் ஜொலிக்கவே முடியவில்லை. பொரமாலை,அணியத்தில இல்லாம மரத்தின் நடுவில் நிற்கச்சொல்லித்தான் சூசையாரை தொழிலுக்கு கூட்டிப்போனாங்க.. நடுமரத்தில வலிமை இல்லாதவங்களைத்தான் விடுவாங்க. பங்கும் குறைய கிடைக்கும். ஆனா கடலுக்குல்ல தூஷணம் நிறையக்கிடைக்கும். உம்ம அப்பன் கொழும்புல என்ன பாவம் பண்ணினாரோ நீரு இங்க இப்படி அனுபவிக்கிறீர் என குத்தல் பேச்சு வேறு..
கொழும்புல அப்படி இப்படினு இருந்திட்டு இப்ப கேவலப்பட வேண்டி இருக்கேணு சூசையார் கவலைப்படஆரம்பித்தார். கவலையை மறக்க சாராயம் குடிக்க ஆரம்பித்தார். சாராயம் சூசையார் தனது பழைய வாழ்க்கையை எண்ணி பெருமைப்பட உதவியது.
ஆனால் ஒரு விசயத்தில் சூசையார் தெளிவாக இருந்தார்.அது தன் ஒரே மகன் ஞானத்தை எப்படியும் நன்றாக படிக்க வைத்து விட வேண்டும் என்பது தான். அவர் அடிக்கடி இதை தன் மகனிடம் சொல்லுவார். ஏல உனக்கு எங்க அப்பா பேரை வைச்சிருக்கேன். நீ அவரு பேர காப்பாத்தணும், இந்த ஊர்ல நீ கலெக்டரா வரணும்லனு சாராயத்த குடிச்சிட்டு வந்துட்டு தினமும் பிரசங்கம் வைத்துக்கொண்டிருப்பார்.
ஞானமும் கடைசில ப்ளஸ் டூ படிச்சு முடிச்சான். இப்பல்லாம் எங்க ஊர்ல எல்லா குழந்தைகளுமே கல்லூரிக்கு போக ஆரம்பிச்சிடுச்சு. ஞானத்த அவங்க அப்பாவுக்கு பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் காலேஜ்ல சேர்த்து விடணும்னு ஆசை, பையன் ப்ளஸ்டூவில் மார்க் பரவாயில்லாம வாங்கிருந்தான்.
காலேஜ்ல இடம் கொடுக்க மாட்டோம்ணு சொல்லிட்டாங்க. கடைசில யார் யாரையோ பிடிச்சு தஞ்சாவூர் பக்கமுள்ள ஒரு காலேஜ்ல பிஎஸ்சி சீட் கிடைச்சது. காலேஜ் பீஸ் கட்ட பணம் இல்லாம 20 வருஷம் போகாத மாமனார் வீட்டுக்கு போய் சூசையார் மச்சினன்மார்கிட்ட இருந்து கூனிக்குறுகி பணம் வாங்கிட்டு வந்தார்.
பெட்டிபடுக்கையோட பையனைக்கொண்டு காலேஜ் ஹாஸ்டல்ல விட பஸ்ல சூசையார் போனார். வண்டி போக போக அப்பா மகன்கிட்ட ஏலே நீ எப்படியும் தாத்தா பேரக்காப்பாத்த நல்லாபடிக்கணும்லனு சொல்லிக்கிட்டே போனாரு.
மகனை காலேஜ்ல விட்டுக்கு ஊருக்கு திரும்பினவர் பெரிய சாதனையே செய்தவர் போல் வானத்தில பறந்தார். ஒரு வாரம் கழித்து சின்ன வலை போறதுக்கு வெளுத்த நேரத்தில கெளம்ப சூசையார் வீட்ட விட்டு வெளியே வந்தா தூரத்தில இருந்து யாரோ பெட்டியோட வர்றமாதிரி தெரியுது.
நம்ம வீட்டை நோக்கித்தானே ஆள் வருது நின்னு பார்ப்போமேணு சூசையார் நின்னா அது அவர் மகன் ஞானம். எலே ஞானம் என்னாச்சுனு கேட்டா,
யப்பா நீங்க கடலுக்கு போய்ட்டு வாங்க, வந்து பேசிக்கலாம்னு சொன்னான். கடல்ல சூசையாருக்கு ஒன்றுமே தோணவில்லை. இன்னைக்கு கடல் ரொம்ப இரைஞ்ச மாதிரி அவருக்கு இருந்தது.
வழக்கத்தை விட அதிகமாகவே அணியத்தில நின்ன பிரகாசத்திடமிருந்து கண்டம் கிடைச்சது. மரம் கரைய வந்தப்ப கறி மீன் கூட எடுக்காம வீட்டை நோக்கி ஒடி வந்தார் சூசையார்.ஏலே என்னாச்சுனு மகன்கிட்டா
கேட்டா அவன் சொன்னான். யப்யா அங்க எதுவுமே பிடிக்கல, அதான் வந்துட்டேங்கிறான்.
அட வாரினி மொவனே காரியத்த கெடுத்தியணு சொன்ன சூசையாருக்கு இனி என்ன செய்யனு புரியவே இல்லை. கடைசில ஞானமே அதுக்கு பதில் சொன்னான். கப்பலுக்கு போப்போறேம்பான்னான். ஏல நீ கலெக்டராவேனு நான் கனவு கண்டேனு அப்பா சொல்ல கப்பல்ல கேப்டன் ஆகலாம்ணு மகன் சொன்னான்.
இனி கப்பல்காரனை நான் எங்க பிடிப்பேணு சொல்லி கீழத்தெருவில கப்பல்ல வேலை செய்ற செபஸ்தியான் மொவன் கிளைட்டனை பாக்க அப்பனும் மொவனும் போனாங்க. அங்க செபஸ்தியான் மொவன் சொன்னதை கேட்டா கப்பல் வேலை குதிரைக்கொம்புமாதிரி இருந்தது.
கடைசியில கப்பலுக்கு போக சிடிசி வேணும், பாம்பே போகணும் அப்படிஇப்படிணு ஒரு லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. திரும்பவும் மச்சினன்மார் வீட்ல போய் நின்னாரு சூசையாரு. அங்க மூத்த மச்சினன் தாட்டுபூட்டுனு குதிச்சிட்டான். அப்பன் சரியா இருந்தா தானே மகன் உருப்படுவான். என் அக்காள உமக்கு தந்தது ஒரு கல்லை கழுத்தில கட்டிகடல்ல தாத்திருக்கலாம்னு ஏசிட்டு ஒரு லட்சம் ரூபாய் தந்தான்.
ஞானம் கடைசியில பம்பாய் வந்தான். இங்க வந்தப்பிறகு தான் தெரிஞ்சது கப்பல் வேலை தேடி இங்க ஒரு ஊரே இருக்குதுனு. போதாக்குறைக்கு
இப்பஎல்லா சாதிக்கார பயலுவலும் கப்பலுக்கு ட்ரை பண்ணுறானுகளாம்.
ஆனா ஞானத்திற்கு இதில அதிஷ்டம் இருந்துச்சுணுதான் சொல்லணும். அவனவன் இரண்டு மூணு வருஷமாக இருந்து வேலைக்கு ட்ரை பண்ணச்சில ஞானத்துக்கு எடுத்த எடுப்பில ஃபாரின் கப்பல்ல 1200 டாலர் சம்பளத்ல வேலை கிடைச்சது.
இப்ப சூசையார கைல பிடிக்க முடியல. மகன் கப்பல் கேப்டன் ஆயிருவானு சாராயத்த போட்டுட்டு கடற்கரையில கதைஉட ஆரம்பிச்சாரு. இப்ப சூசையாரு வீட்ல போன் எடுத்தாச்சு. ஞானம் ஒருநாள் அமெரிக்காவில இருந்து போன் பண்ணினான். ஞானம் இப்ப அமெரிக்காவில இருக்கானு மெனக்கெட்டு மச்சினன் வீட்டுக்கு போய் சொல்லிட்டு வந்தாரு.
ஒரு 40 நாள் கழிச்சி ஞானம் போன் பண்ணினான். யய்யா கப்பல் கொழும்பு வந்திருக்கு. நீங்களும் தாத்தாவும் எங்க இருந்தியேனு கேட்டான். அது எதுக்குல உனக்குன்னு சொன்ன சூசையார் கொச்சி கடையில அந்தோணியார் கோவில் பக்கம்ணு சுருக்கமா சொன்னார்.
இப்பல்லாம் சூசையார் கடலுக்கு போறதுல்ல. மகன் முதல் மாசம் சம்பளம் வந்தாச்சு. இனி எதுக்கு கஷ்டப்படணும்.
அன்னைக்கு ஊர்ல பயங்கர கடலடி யாரும் கடலுக்கு போகல. சூசையார் கடற்கரையில் உட்கார்ந்திருந்தார். அப்ப அங்க வந்த பிரகாசம் என்ன சூசையாரு, குத்துவலை வைக்கப்போறோம் வாறேராணு கேட்டான். நான்தான் இனி கடலுக்குதான் வர மாட்டேமுனு சொல்லிட்டேனேனு சூசையார் பதில் சொன்னார்.
அந்த நேரத்தில போஸ்ட்மேன் அருளப்பன் வந்தார். யோய் மாட்டு வாலு உமக்கு ஒரு கடிதம் வந்திருக்குனு சொன்னான். எனக்கு யாரு கடிதம் போடுவாங்க.என் மகன் தான் இப்ப போன்லயே பேசுவானேணு சொன்ன சூசையார் கடிதத்தை வாங்கி பிரித்தார்.
கடிதம் கொழும்பிலிருப்து வந்திருந்தது.
அன்புள்ள அப்பாவிற்கு,
நான் கொச்சி கடைக்கு போனேன். அங்கே பாட்டியை பார்த்தேன். சிங்களமா இருந்தாலும் தமிழ் நன்றாக பேசுகிறார்களே?. பாட்டியை இங்கு கவனிக்க யாரும் இல்லை. தனியாகத் தான் இருக்கிறார்கள். எனவே அவர்களை கவனிக்க நான் கப்பலிருந்து இறங்கி விட்டேன். என்னை இனி தேட வேண்டாம்.தாத்தா பேரு என்பதால் அவர்களுக்கு என்னிடம் கொள்ளை பிரியம்
சூசையார் கட்டுமரத்தை விட்டு எழுந்தார். ஏ பிரகாசம் குத்து வலை வைக்க நானும் வாறேன்ப்பா. பிரகாசம் சூசையாரை ஏற இறங்க பார்த்தான். சூசையார் கடலை பார்த்தார்.
பின்குறிப்பு:
1.கொலுக்காரு- ஜோடிக்கட்ட கார்
2.பட்டண பிரவேசம்- புதுமணத்தம்பதியரை ஊர்வலம் அழைத்து வருவது
3.பொரமாலை- கட்டுமரத்தின் பின்பகுதி
4.அணியம்- கட்டுமரத்தின் முன்பகுதி
5.பங்கு- கடலிலிருந்து கிடைக்கும் வருமானம்
6. சின்னவலை- அதிகாலை போகும் கடலுக்கு போகும் ஒரு வகை வலை
7.வெளுத்த நேரம்- அதிகாலை
8.கறிமீன்- வீட்டு சாப்பாட்டுக்கு கொண்டு செல்லும் மீன்
9.கடலடி- கடல் கொந்தளிப்பு
10. குத்துவலை- கடலின் ஆழத்தில் செல்லாமல் கரையில் மீன்பிடிக்கும் ஒரு வகை வலை
Saturday, March 1, 2008
| [+/-] |
பரவர் குரல்- சில கேள்விகளுக்கு பதில்கள் |


